நானாகிய நான்…

கமெனும் பரவெளியில் தேர்த்துகளாய்த் திரிந்தலையும் நானாகிய நான்…

–  பெரும்பான்மைப்பொழுதுகளில் இறக்கை தேடும் சிறுமியாகவும் மற்ற பொழுதுகளில் பெண்ணாகவும் சில சமயங்களில் விளிம்புகளில் அகப்படாத ஏதோ உணர்வாகவும் உழலும் மானுடப்பிறப்பு.

கதைகளிலே பெரும்பாலும் என் இருப்பு.

நிஜங்களில் இருந்து கற்பனைக்குத்தாவும் பாய்ச்சலில் அலாதி மயக்கமுண்டு.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் என் ஆர்வம் கீறும். காதலும் ஹாஸ்யமும் கடந்து சமூக அக்கறை மெலிதாய்த் தலைகாட்டும் எழுத்து இப்போதைய நிலை.

கவிதைகளில் சொல்லிவிட முடியாத ஆயிரம் கனத்த மௌனங்களை உள்ளே சுமந்தபடி அலையும் ஜீவன்.

​என் எழுத்து யாருக்கானதும் அல்ல.

என் சுயத்தைப்பரிசீலித்துப்பார்க்கும் எனக்கான வினாத்தாள்.

ஏதோ ஒருவகையில் அது உங்களுக்கும் பயன்படுமானால் மகிழ்ச்சி…

கவிதைக்கிணறு

றட்சியின் வெம்மை புகைய
இருண்டு சுருங்கும் கிணறு
நேற்றைய அலைகளின் படிமங்கள் 
இறுகிய பாறைகளாய் இருளுண்டு கிடக்கின்றன
 
உயிர்ப்பின் மதர்ப்பில் முன்பு
உடைந்தோடிய நீர்க்குமிழ்களின்
ஒலித்திவளைகளை கனவில்
சுமந்தலையும் சவக்குளிர்காற்று
பெருகித்திரண்ட புனல் புணர்ந்து
ஈரப்பசுமை கிளர்ந்த நினைவில்
சுவர்கள் கேவும் ஒலி
பலமற்ற எதிரொலியாய்
மடங்கி இருளில் கரைகின்றன
 
புனலுண்ட யாவையும்
வறட்சியின் கூர்நா கத்தியால்
கிழிபட்டு இறந்து கருகும் நாற்றம்
மெல்ல மயானமாகின்ற கிணற்றினொரு மூலையில்
மலட்டுத்தரையின் ஏதாவதொரு இணுக்கிலிருந்து
இன்றாவது ஈரம் கசியுமென்ற நம்பிக்கையோடு
காத்துக்கிடக்கிறதிந்த ஊமைத்தவளை

சுயம்

ஒவ்வோரு கணமும் பெருக்கிறது

என்னைத்தனக்குள் அமிழ்த்துகிறது

இருளிலும் மருட்டும் தவிர்க்கமுடியா நிழல்

கடும்பசி கொண்டலையும் பேயன்ன அழல்

கண்ணாடியில் உமிழ்கிறேன் எனக்கு பதில்

அங்கே அதன் பிம்பம் உரக்கச்சிரிப்பதால்

நொடி தோறும் உணவுகேட்கிறது

மனம் உண்டு செறிக்கிறது

அந்த நிழல் இன்றி இந்த நிஜம் இல்லை

அதைத்தொலைக்கும் வழி தெரியவில்லை

கண்ணீர் வடிக்கும் என்னைப்பார்த்து

கைகொட்டிச்சிரிக்கிறது என் சுயம்

துளி…

நெடுநேரம் உள்ளங்கையில் ஏந்தியிருந்தேன்
என் ஒற்றைக் கண்ணீர்த்துளி
உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்
ஆவிப்புகை மீண்ட கண்ணாடி பிம்பம் போல
அதன் மேலே மெல்லத்தெரிகின்றன

ஆயிரம் கதைகளும்
சில உடைந்த மெல்லிய இதயங்களும்
ஒட்டுப்போட்ட உறவுகளும்
காயப்பட்ட கனவுகளும்
வலி தீண்டிய நினைவுகளும்

நீண்ட அவதானிப்பின் பின்னிரவில்
கண்ணீர்த்துளி கரைகிறது
தன் இறுதிப்பிரதிபலிப்பாய்
அனுபவப்புன்னகையொன்றை
பரிசளித்தபடி..

கனவுலகு

வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறது
இறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறது
எட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்
அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறது
எனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறது

அது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறது
என்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லை

என் கண்களை வானமே நிறைத்து நிற்கிறது
சிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லை
கண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில் வெறித்துப்பார்த்தபடி கிடக்கிறேன்
கண்ணீர் பெருகி வழிந்து தரையின் பனியோடு கலந்தோடுகிறது

அசையாத உடலின் பிரஞ்ஞை மெல்லக்கரைகிறது
காற்றின் மோன கீதத்தில் அந்தப்பெருவெளியில் மிதக்கிறேன்
எனக்கான பாடல், நான் அறியாத பாடலை காற்று என் காதில் பாடுகிறது
நான் நானாகத்தெரிகிறேன் நானில்லாமலும் தெரிகிறேன்

வானம் அருகே வந்தது போலத் தோன்றுகிறது
மீண்டும் விரல் நீட்டுகிறேன், அது மேலே தாவிக்கொள்கிறது
அந்தப்பெருவெளியின் பிரம்மாண்டமாய் நான் தெரிகிறேன்
தனியளாய் அனைத்தும் நிறைத்துக்கிடக்கிறேன்.
பின் மீண்டும் தரையில் கிடக்கிறேன்

வானம் சிரிக்கிறது
காற்று பாடுகிறது
பூமி அணைக்கிறது

பின் திடீரென்று ஏதோவொன்று வந்து இமையகட்டிப்பிரிக்கிறது
கண்ணீர் துடைத்தபடி விழி விரித்துப்பார்க்கிறேன்
விடிந்து விட்டது.